டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கான்வாய் மீது பா.ஜ.க தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், பிரச்சாரத்தின் அரவிந்த் கெஜ்ரிவால் கார் அருகே சில நபர்கள் கருப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கார் மீது ஒரு கல் எறியப்பட்டது.
இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு பா.ஜ.க மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பா.ஜ.க வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் அடியாட்கள், அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது கற்களால் தாக்கி, அவரை காயப்படுத்த முயன்றனர். இதனால் அவர் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. பாஜக மக்களே, உங்கள் கோழைத்தனமான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் பயப்படப் போவதில்லை, டெல்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்று கூறியுள்ளது.