உத்தரப் பிரதேச மாநிலம், நவாப்கஞ்ச் பகுதியில் ராம் ஜானகி கோயில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கோயிலில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அஷ்டதாத்து சாமி சிலை ஒன்று இருந்தது. இந்த கோயிலுக்கு, சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கோயிலில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சிலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று காணாமல் போய்விட்டது. சாமி சிலை திருடப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கோயிலின் அர்ச்சகர் ஜெய் ராம்தாஸ் மகாராஜ், காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையின் கவுகாட் இணைப்புச் சாலையில் சாக்கு மூட்டைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் பேரில், போலீசார் அங்கு வந்து சாக்கு மூட்டையை திறந்த பார்த்த போது அதில் திருடப்போன சிலை இருந்தது. மேலும், அந்த சிலையுடன், அர்ச்சகர் ஜெய் ராம்தாஸ் மகாராஜுக்கு எழுதிய ஒரு மன்னிப்பு கடிதமும் இருந்தது.
திருடன் எழுதிய அந்த கடிதத்தில், ‘நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என் அறியாமையால், நான் ராதா கிருஷ்ணரின் சிலையை கௌகாட்டில் இருந்து திருடிவிட்டேன். அன்றிலிருந்து, எனக்கு கெட்ட கனவுகள் வருகிறது. மேலும், என் மகனின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. சில பணத்துக்காக நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்து சிலையை மீண்டும் கோவிலில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதன் அடையாளத்தை மறைக்க அதன் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. மகராஜ் ஜி, எங்கள் குழந்தைகளை மன்னித்து, உங்கள் சிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த சிலையை மீட்ட பிறகு, அந்த சிலையை மீண்டும் கோயிலில் நிறுவப்பட்டது. இதனிடையே சிலையை திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள், அருகில் உள்ள பகுதிகள் மற்றும் சிலை கண்டெடுக்கப்பட்ட நெடுஞ்சாலை ஆகியவற்றில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.