Skip to main content

பங்குச்சந்தை: ஸ்டார் ஹெல்த் ஐ.பி.ஓ. வெளியீடு! 

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Stock Market: Star Health IPO Release!

 

மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ‘ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ்’ நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. 

 

பங்குச்சந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு முதலீடுகளைத் திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு; அதாவது, ஐ.பி.ஓ. என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐ.பி.ஓ.க்களுக்கு வரவேற்பு இருக்கும். 

 

இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐ.பி.ஓ.வை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் புரமோட்டராக இருப்பதால், இப்பங்கின் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிந்துள்ளது. 

 

இந்நிறுவனம், 7249.18 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட்டுள்ளது. வரும் வியாழனன்று (டிச. 2) இந்த வெளியீடு முடிவடைகிறது. கிரிசில் தரவுகளின்படி, இந்நிறுவனத்திற்கு சில்லறை வர்த்தகத்தில் 31.3 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. 

 

இந்த ஐ.பி.ஓ.வில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை 870 முதல் 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐ.பி.ஓ.வை பொருத்தவரை, நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களின் விற்பனை, புதிய பங்கு வெளியீடு என்று கலவையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

 

ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், சேப்கிராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா எல்.எல்.பி., கோனார்க் டிரஸ்ட் அன்டு எம்.எம்.பி.எல். டிரஸ்ட் உள்ளிட்ட புரமோட்டர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யலாம் எனத் தெரிகிறது. மேலும், அபிஸ் குரோத் 6 லிமிடெட், மயோ 4 ஸ்டார், யூனிவர்சிட்டி ஆப் நோட்ரி டேம் டு லாக், மயோ ஸ்டார், ஆர்.ஓ.சி. கேபிடல், வெங்கடசாமி ஜெகநாதன், சாய் சதீஸ், பெர்ஜிஸ் மினு தேசாய் ஆகிய புரோமோட்டர்களும் தங்களுடைய பங்குகளை விற்கலாம் என்கிறார்கள். 

 

எனினும் முதன்மை புரமோட்டரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது 14.98 சதவீத பங்குகளை விற்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. 

 

இந்த ஐ.பி.ஓ.வில், 2000 கோடி ரூபாய்க்கான ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களின் 5249 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனைக்கான சலுகை (ஓஎப்எஸ்) ஆகியவையும் அடங்கும். இது மட்டுமின்றி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. முதலீட்டாளர்கள், அதிகபட்ச வெளியீட்டு விலையின் அடிப்படையில், 16 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் கோர முடியும். அதாவது,  ஒரு லாட் வாங்க 14400 ரூபாய் தேவை. 

 

இந்த வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (கியூஐபி) 75 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் (என்ஐஐ) மீதமுள்ள 10 சதவீத பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியில் இருந்து இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.

 

 

 

Next Story

அதிகாரிகளின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்.. முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Ex-CEO Arrested in Case of Cell Phone Polling of Stock Market Officials

 

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

 

2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு புகார்களை முன்வைத்தது. பங்குச்சந்தையின் ரகசியங்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்துவருகிறது.

 

இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்தது. பங்குச்சந்தை முறைகேட்டிற்காக இருவருக்கும் தலா ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைக்காததால் அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணா மீதும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் ரவி நரேன் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை புதிதாக வழக்குகளைப் பதிவு செய்தது. இது குறித்து சிறையில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்திய நிலையில், பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனிடமும் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட ரவி நரேன் 1994 முதல் 2013 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.