இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்குப் போட்ட போட்டியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பாராளுமன்றத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிகாரம் மிக்க பதவிகளில் ஒன்று சபாநாயகர் பதவி. சபாநாயகரே பேரவையை நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் அவையின் அலுவல்களைக் கவனிக்கும் அதிகாரம் கொண்டவர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள், தீர்மானங்கள் சபாநாயகரின் அனுமதியின்றி பேரவையில் தாக்கல் செய்ய முடியாது.
சபாநாயகர் கொடுக்கும் இசைவின் அடிப்படையில்தான் விவாதங்கள் நிகழ்த்தப்படும். இசைவு இல்லை எனில் விவாதங்கள் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் தகுதி நீக்கம் செய்யும் அளவிற்கு அதிகாரம் கொண்ட பதவியாகச் சபாநாயகர் பதவி இருக்கிறது. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தில் 2016-21 அதிமுக ஆட்சிக்காலத்தில் 2017 ஆம் ஆண்டு 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகரின் அதிகாரம் சரியானது எனத் தீர்ப்பளித்தது. சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அளவிற்கு அதிகாரம் கொண்டது சபாநாயகர் பதவி. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட போது 24 மணி நேரத்தில் அவருடைய பதவி சபாநாயகரால் பறிக்கப்பட்டது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவிக்கு இரண்டு தரப்பிலிருந்து போட்டாபோட்டி நடைபெற்று வருகிறது.