ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் ஒன்றிய அரசு விவசாயி சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், விவசாயிகள் சட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டம் ஓயும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். அதேபோல், மூன்று வேளாண் சட்டத்திற்கும் எதிராக விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு கையாண்ட விதத்தை கடுமையாக சாடியது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க 2021ம் ஆண்டு குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே மோதல் நடந்து. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்வினையாக 2021ம் ஆண்டு அக். மாதம் 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்ததும் இன்றும் மக்கள் மனதில் இருந்து வடியாத வடுவாகவே உள்ளது. இது தவிர டெல்லியில் கடும் குளிரில் போராடிய விவசாயிகள் பலர் உயிரிழந்தனர்.
இப்படி பல்வேறு போராட்டமும், உயிரிழப்புகளையும் கடந்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா மட்டுமின்றி விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது மட்டுமின்றி, குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும், அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையேற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
ஆனால், தற்போதுவரை ஒன்றி பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் சங்கங்கள் சார்பாக போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் வருவதை தடுப்பதற்கு ராணுவமும் போலீஸும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தன. குறிப்பாக விவசாயிகள் வரும் சாலைகளில் ஆணிகள் பதிப்பது, வழியில் முள்வேலிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டன. இதனை எல்லாம் தாண்டி விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கி நகர்ந்தபோது போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. கலைந்து செல்லாமல் இருந்த விவசாயிகள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ந்து விவசாயிகளை அடக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்க, அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகளை முடக்க அதிபயங்கரமான ஆயுதம் ஒன்று போராட்டக் களத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதிப் பயங்கர ஒலி எழுப்பக்கூடிய சோனிக் ஆயுதம் எனப்படும் எல்.ஆர்.ஏ.டி. போராட்டக் களத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மனித செவிமடல் தாங்கும் ஒலி அளவைவிட பன்மடங்கு அதிகமாக இதில் இருந்து ஒலி எழுப்பப்படும். அப்படி அதிக ஒலி எழுப்பப்படும்போது, மனித செவி திறன் பாதிக்கப்படும். இந்த ஒலியை தாங்க முடியாமல் போராடும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து செல்வார்கள் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.