2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்யவுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் இந்தப் பட்ஜெட்டின் மேல் திரும்பியுள்ள நிலையில், இந்திய பட்ஜெட் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ;
இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 73 ஆண்டு பட்ஜெட்டுகள், 14 இடைக்கால பட்ஜெட் மற்றும் நான்கு சிறப்பு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் நவம்பர் 26, 1947 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் இதுவரை அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர். 1962 முதல் 1969 வரை நிதியமைச்சராக இருந்த அவர் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதற்கடுத்ததாக, ப. சிதம்பரம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பிரணாப் முகர்ஜி 8 முறையும், யஷ்வந்த் சின்ஹா 8 முறையும், மன்மோகன் சிங் 6 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் 4ஆவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். மொரார்ஜி தேசாய் இரண்டு முறை தனது பிறந்தநாளன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது பிறந்தநாள் பிப்ரவரி 29 ஆம் தேதியாகும்.
நிர்மலா சீதாராமன், கடந்த 2020ஆம் ஆண்டு 2 மணிநேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது பதிவானது. வரலாற்றில் அதிக வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட் உரை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்தமானது. 1991 ஆம் ஆண்டில் அவர் 18,650 வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட் உரையை வாசித்தார்.
இதுவரை நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூன்று பிரதமர்களே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முழு நேர பெண் நிதியமைச்சர் ஆவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நிதித்துறையை தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் அண்மைக்கால மாற்றங்கள்;
பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தநிலையில், 2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதல் காகிதமற்ற பட்ஜெட் தாக்கல் செய்யயப்பட்டு வருகிறது.