
கேரளாவில் கரோனாவுக்கு மத்தியிலும் பெரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒடி கொண்டிருக்கும் சம்பவம் ஸ்வப்னா சுரேஷின் தங்க கடத்தல் விவகாரம். இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கேரளா முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் 2 மாதத்துக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சுங்கத்துறை மற்றும் அமலாக்கதுறையின் விசாரணை வளையத்தில் இருந்த சிவசங்கரன் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரளா உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் பெற்று தனது மனைவி கீதா டாக்டராக பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பிறகு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடா்ந்து அங்கிருந்து வஞ்சியூரில் ஆயூா்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் 23ஆம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்ய தடை விதித்திருந்தது. அதன் பிறகு 23ஆம் தேதி மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அப்போது 28ஆம் தேதி வரை கோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் கஸ்டம்ஸ் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அவா் மீது குற்றச்சாட்டுகள் ஆணித்தரமாக உள்ளது, அவரை விசாரிக்க வேண்டும். மீண்டும் முன்ஜாமீன் கொடுத்தால் அவர் மீதான விசாரணைக்கு தடையாக இருக்கும். இதனால் இந்த வழக்கும் நீண்டு கொண்டே தான் செல்லும். இதை தொடர்ந்து தான் சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதனை தொடர்ந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிவசங்கரனை ஆயூர்வேத மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய வைத்து அவரை கொச்சியில் இருக்கும் கஸ்டம்ஸ் மண்டல அலுவலகத்துக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் 13 கேள்விகள் கேட்க இருக்கின்றனர். அந்த கேள்விகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் சிவசங்கரன் கைது செய்யப்படாலம் என்கிறது கஸ்டம்ஸ் வட்டாரம்.
இதற்கிடையில் கேரளா சட்டமன்ற எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிட்டு அதை வேறொருவரிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். சிவசங்கரன் கைது செய்யப்பட்டால் கேரளாவில் துறை செயலாளா்களில் கைது செய்யபட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவா் தான் என்பது குறிப்பிடத்தக்கது.