![nihang](http://image.nakkheeran.in/cdn/farfuture/n6xQVo06YNDw1p-jXscEvlM5uchfS1TbYiKpd5Ax88M/1634386539/sites/default/files/inline-images/cdfv.jpg)
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், டெல்லி - ஹரியானா எல்லையான சிங்கு எல்லையிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹரியானாவின் குண்ட்லியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, கவிழ்த்துப் போடப்பட்ட காவல்துறை பேரிக்காடில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளார். அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டிருந்தது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததற்காக நிஹாங்ஸ் சீக்கியர்கள் இந்த கொலையைச் செய்ததாகக் கூறப்பட்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவசரக் கூட்டத்தைக் கூட்டிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் 40 வேளாண் அமைப்புகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, இறந்த நபர் மற்றும் நிஹாங்ஸ் குழு ஆகிய இருதரப்புக்கும், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்ததோடு காவல்துறை விசாரணைக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு கொலைக்கு பொறுப்பேற்று சரவ்ஜித் சிங் என்னும் நிஹாங்ஸ் சீக்கியர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சரவ்ஜித் சிங் சரணடையும் முன் சில நிஹாங்ஸ் சீக்கியர்களோடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததற்காக தான் இறந்த நபரை தண்டித்ததாக தெரிவித்தார். மேலும் அப்போது சரவ்ஜித் சிங்கும், அவருடன் இருந்தவர்களும், "அவமதிப்பு போன்ற குற்றங்களை யாரவது மீண்டும் செய்ய துணிந்தால், தாங்களும் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்வோம்" எனத் தெரிவித்தனர்.
மேலும் சரவ்ஜித் சிங்கிடம் கொலை செய்ததற்காக வருத்தப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, இல்லை எனத் தெரிவித்தார். இதற்கிடையே சரவ்ஜித் சிங், இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு நபர்கள் குறித்த தங்களுக்குத் தகவல் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.