சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா என்ற பகுதி இந்தியா - சீனா எல்லை பகுதியில் உள்ள சுற்றுலாத் தளம் ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள இயற்கை காட்சிகளை காண வருகின்றனர். இந்நிலையில் கேங்டாக் - நாதுலாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 14வது மைல்கல் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த சுமார் 30 சுற்றுலா பயணிகள் இந்த பனிச் சரிவு விபத்தில் சிக்கியதாகத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் பனிச் சரிவில் சிக்கியவர்களை கடும் போராட்டத்திற்கு பிறகு சுமார் 23 பேரை போராடி உயிருடன் மீட்டனர். மேலும் பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. வேறு யாரேனும் பனிச் சரிவில் சிக்கி உள்ளனரா என மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.