Skip to main content

அமைச்சர்களை உளவு பார்த்ததா மத்திய அரசு..? பெகாசஸ் சர்ச்சையின் பின்னணியும், அரசின் விளக்கமும்...

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

narendra modi

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.  தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

தொலைபேசி ஹேக்கிங் தொடர்பான தற்போதைய சர்ச்சை என்ன?

 

பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO GROUP) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்து, அவர் என்ன வார்த்தையைத் தட்டச்சு செய்கிறார் என்பது வரை கண்காணிக்க முடியும். இந்தநிலையில் 'போர்பிடேன் ஸ்டோரிஸ் மற்றும் 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' ஆகியவை பெகாசஸ் மென்பொருளால் ஹேக் செய்யப்பட்ட தொலைபேசி எண்கள் உள்ள தரவுதளத்தை கண்டறிந்து, அதிலுள்ள எண்களை சர்வதேச ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

 

இதனையடுத்து இந்த ஊடகங்கள், அந்த தொலைபேசி எண்கள் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வு செய்தன. இதில் உலகம் முழுவதும் பல்வேறு ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் எண்களைக் கொண்டு அவர்களது ஃபோன்கள் ஹேக்  செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி எண்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

என்.எஸ்.ஓ குரூப், தங்களது பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. இதனால் அரசே சட்டத்தை மீறி உளவு பார்த்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே சர்ச்சைக்குக் காரணம்.

 

ஹேக்கிங் சர்ச்சை தொடர்பாக என்.எஸ்.ஓ குரூப் மற்றும் ஆய்வு செய்த ஊடகங்கள் கூறுவது என்ன?

 

இந்த சர்ச்சை தொடர்பாக என்.எஸ்.ஓ குரூப், தற்போது வெளியாகியுள்ள இந்த எண்கள், அரசாங்கத்தால் ஹேக் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுபவர்களின் எண்களாக இருக்காது எனவும், என்.எஸ்.ஓ குரூப் வாடிக்கையாளர்களால் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளது.

 

அதேநேரத்தில்  'பெகாசஸ் ப்ராஜெக்ட்' ஆய்வில் ஈடுபட்ட ஊடகங்கள், "வெளியான எண்களில், சில எண்களைப் பயன்படுத்திய தொலைபேசிகளை நாங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில், 37 தொலைபேசிகள் பெகாசஸ் மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கின்றன"எனக் கூறியுள்ளன. இந்த 37 தொலைபேசிகளில் 10 தொலைபேசிகள் இந்தியர்களுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹேக்கிங் சர்ச்சை குறித்து மத்திய அரசு கூறுவது என்ன?

 

பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அரசு மறுத்துள்ளது. "இந்தியா ஒரு வலுவான ஜனநாயகம், அது அனைத்து குடிமக்களுக்கும் 'தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை'யாக இருப்பதை உறுதி செய்ய உறுதி பூண்டுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் மீதான அரசாங்க கண்காணிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு உறுதியான அடிப்படை ஆதாரமோ, குற்றச்சாட்டில் உண்மையோ இல்லை" எனக் கூறியுள்ளது.

 

மேலும் தொலைபேசி உரையாடல்களைக் குறுக்கீடு செய்வது, கண்காணிப்பது என அனைத்தும் சட்டப்படியே செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் தொலைபேசியை ஹேக்கிங் செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வந்த குறுஞ்செய்தி; விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Center govt orders inquiry into warning text messages sent to opposition leaders

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கித் தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மேலும், அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எச்சரிக்கை குறுந்தகவல் வந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த எச்சரிக்கை குறுந்தகவல் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இது போன்ற குறுந்தகவல் வந்துள்ளதாகவும்” தெரிவித்தார்.  

 

 

Next Story

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.