கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா என்ற பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் சித்துரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி என்றும் அவர் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார் என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ரேணுகா சாமியிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகாறாறு காரணமாக தாங்கள்தான் கொலை செய்தோம் என்று 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு அவரது தோழியுமான நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நடிகர் தர்ஷனுக்கு ஏற்கெனவே விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தர்ஷனுக்கும், பவித்ரா கௌடாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறாராம்.
இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி வரச் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் அவரது ஆட்கள் தர்ஷனின் நெருங்கிய நண்பரான வினய் குமாரின் வீட்டிற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தர்ஷனும், பவித்ராவும் தங்களது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடுமையாகத் தக்கியுள்ளனர். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்ஷன் - பவித்ரா இருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக போலீஸில் சரண் அடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் ரேணுகா சாமி உடல் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வினய் குமாரின் காரில் இருந்து ரேணுகா சாமியின் உடல் வீசப்படுவது பதிவாகியுள்ளது. மேலும் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தர்ஷனும் பவித்ராவும் காரில் வந்துள்ளதையும், இருவரது செல்போன் சிக்னல் அதே இடத்தில் இருந்ததையும் உறுதி செய்த போலீசார் தர்ஷன், பவித்ரா உட்பட 10 பேரைக் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேணுகா சாமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், தர்ஷன், பவித்ரா மற்றும் அவரது ஆட்கள் ரேணுகாசாமி மீது மின்சாரத்தை செலுத்தி கொடூரமாகக் கொன்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகை ரம்யா, நடிகர் கிச்சா சுதிப் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரேணுகா சாமிக்கு நீதிவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.