இந்தியா, சீனா எல்லைப்பிரச்சனைக்கு நேருவும், காங்கிரஸ் கட்சியும் தான் காரணம் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பல்வேறு மாநிலங்களிலும் காணொளிக்காட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய சிவராஜ்சிங் சவுஹான், "காங்கிரஸிலிருந்து வந்த எந்த பிரதமரும் கிழக்கு லடாக் எல்லையில் துணிச்சலாகச் சாலை அமைத்தது கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் சாலை அமைத்து வருகிறது. இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது. இது சீனாவை எரிச்சலடைய வைத்துள்ளது.
மோடி தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவதால், தன்னை எப்படியும் வளர்ச்சியில் முறியடித்துவிடும் என்ற அச்சத்திலேயே சீனா இப்படிச் செய்கிறது. ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் சகித்துக்கொள்ளப்படாது. இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்த நினைத்தால், 130 கோடி மக்களும் சேர்ந்து சீனாவை அழித்து விடுவார்கள். 1962 -இல் இருந்தது போன்ற இந்தியா தற்போது இல்லை என்பதைச் சீனா உணர வேண்டும். இந்தியா-சீனா ராணுவப் பிரச்சனைக்குத் தொடக்கமாக இருந்தது காங்கிரஸும், முன்னாள் பிரதமர் நேருவும்தான். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு மோடி நிரந்தரமான தீர்வு காண்பார்" எனத் தெரிவித்துள்ளார்.