எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளோடு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார். தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடும், கம்ப்யூனிஸ்ட் கட்சியோடும் கூட்டணி சேராமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க நான் தயாராக இருக்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது, “நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். இப்போது அதை முன்னின்று வழிநடத்துபவர்கள்தான் நிர்வகிக்க வேண்டும். அவர்களால் நிகழ்ச்சியை நடத்த முடியாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுவேன். வாய்ப்பு கிடைத்தால் அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் இந்தியா கூட்டணியை இங்கிருந்து இயக்க முடியும்” என்று பேசினார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு, இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூட்டணி கட்சிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதில், சமாஜ்வாதி போன்ற சில கட்சிகள் ஆதரவும் அளித்தது. இது குறித்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளதாவது, “மம்தாவின் இந்தக் கருத்தை நாங்கள் அறிவோம். அவர் இந்திய கூட்டணியின் முக்கிய உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். மம்தா பானர்ஜியோ, அரவிந்த் கெஜ்ரிவாலோ, சிவசேனாவோ, நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். விரைவில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் பேசுவோம். மம்தா பானர்ஜி எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஒரு நல்ல தலைவர்” கூறினார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி பேச்சுக்கு சரத்சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஆம், நிச்சயமாக. அவர் இந்த தேசத்தின் முக்கியத் தலைவர். அந்தத் திறன் அவருக்கு உண்டு. அவர் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய தலைவர்கள் பொறுப்புள்ளவர்கள், கடமைப்பட்டவர்கள் மற்றும் நன்கு அறிந்தவர்கள். எனவே, அவ்வாறு கூற அவருக்கு உரிமையுண்டு” என்று கூறினார்.