இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸிடமிருந்து மக்களைப் பாதுகாக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசின் நிபுணர்கள் பூஸ்டர் ஷாட்கள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களுக்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளது. நாட்டில் போதுமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதையும், ஒமிக்ரான் கரோனா பரவலையும் சுட்டிக்காட்டி இந்த அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் பல்வேறு முன்னணி நாடுகளில் கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் மக்களுக்குப் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பிவந்தது குறிப்பிடத்தக்கது.