பீகார் மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், இம்மாநில பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக பங்கஜ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இவர் வழக்கம்போல், இன்று காலை சபியாத் பகுதியில் விமான நிலையம் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பங்கஜ் யாதவை சுட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கி குண்டு பங்கஜ் யாதவின்மார்ப்பில் பாய்ந்ததில், அவர் பலத்த காயமடைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள், பங்கஜ் யாதவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் நவ்டோலியா பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு, ஆளும் அரசான ஐக்கிய ஜனதா தள அரசிற்கு, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.