Skip to main content

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழு சந்தை அங்கீகாரம் - நிபுணர் குழு பரிந்துரை

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

vaccine

 

சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் கடந்தாண்டு தொடக்கத்தில் அவசரகால அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் கேட்டு அத்தடுப்பூசிகளைத் தயாரித்திருந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்தநிலையில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு,  கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்பட்டால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழக்கமான சந்தையில் விற்பனை செய்யலாம். பொதுவாக இரண்டு கட்ட ஆய்வக பரிசோதனை தரவுகள் ஆராயப்பட்டு, தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளைவிட பயன்கள் அதிகம் என உறுதியான பின்னர் தடுப்பூசிகளுக்கு அவசர கால அங்கீகாரம் வழங்கப்படும்.

 

அதேநேரத்தில் தடுப்பூசிக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு முன்னர், அதன் மூன்று கட்ட ஆய்வகப் பரிசோதனை தரவுகளும் ஆராயப்படும். மேலும் குறிப்பிட்ட தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மக்களில் பெரும்பாலோனோருக்கு அத்தடுப்பூசி பாதுகாப்பனதாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததா என்பது உறுதி செய்யப்படும். அதன் பின்னரே முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்