SC verdict for Cancellation of the case registered by the ed

கர்நாடகத்தைச் சேர்ந்த அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மதுகர் ஆங்குர் என்பவர் பல்கலைக்கழக சொத்துகளை முறைகேடாக விற்று ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மதுகர் ஆங்குர் முறைகேட்டில் ஈடுபட உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழகத்தின் மற்றொரு முன்னாள் துணை வேந்தரான பாவனா திப்பூர் என்பவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி மதுகர் ஆங்குர் பணப்பரிவர்த்தனை செய்வதற்குத்தன் கணக்கை பயன்படுத்த பாவனா திப்பூர் அனுமதித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

Advertisment

அதனைத்தொடர்ந்து பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வராத குற்றம் தொடர்பாகத்தன் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது தவறு எனக் கூறி பாவனா திப்பூர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பாவனா திப்பூர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்ட வரம்பில் வராத குற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியாது. பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வரும் குற்றச்செயல் மூலமாக முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்திருந்தால்தான் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும்” எனக் கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ஐபிசி 120 பி என்ற சட்டப் பிரிவின் கீழ் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.