பிரதமர் மோடி அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் வீர சாவர்க்கர் என்ற விமான நிலையத்தை ஒரு வாரத்திற்கு முன்பு காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்திருந்தார். ஏற்கனவே இருந்த விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு ஜூலை 18 ஆம் தேதி அன்றுதான் தொடங்கி வைக்கப்பட்டது. இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் அந்தப் பகுதியில் பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரைகள் சரிந்து பறந்து விழுந்தன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஏற்பட்ட இந்த பாதிப்பானது விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் மட்டும்தான் எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்காக அந்தப் பகுதி தளர்த்தி வைக்கப்பட்டிருந்த பொழுது காற்றால் கூரைகள் பிரிந்து சென்றதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார். அதே நேரம் 'வேலை முடிந்ததோ இல்லையோ தரம் குறைந்த கட்டுமானங்கள் எதை வேண்டுமானாலும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், ரயில்கள் என மோடி தொடங்கி வைப்பார்' என சிந்தியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார்.