நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், "அஜித் பவாருடன் சென்ற 8 எம்எல்ஏ-க்களில் 5 பேர் திரும்பிவிட்டனர். அவர்களிடம் பொய் கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க காரில் கடத்திச் செல்லப்பட்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். அஜித் பவாரும் விரைவில் எங்களுடனான கூட்டணிக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்பு மற்றும் நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அவரை பாஜக-வினர் மிரட்டியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் சாம்னா பத்திரிகை மூலம் விரைவில் சுட்டிக்காட்டப்படுவார்கள் என்று தெரிவித்தார்.