கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சூழலில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் சபரிமலை மகர விளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலை தரிசனத்திற்கு ஏற்கனவே ஆன்லைன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நேரடி முன்பதிவுக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றும், இது வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 ஆயிரம் பக்தர்கள் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் குறைகளை சரி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போலீஸ் டிஜிபி தலையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.