உத்தரபிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் பொறுப்பில் உள்ள உத்தரபிரதேச மாநில பகுதியில் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தனது அரசியல் பார்வை குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூடியுள்ள ராபர்ட் வதேரா, ‘‘நான் பல ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். குறிப்பாக உத்தரபிரதேச மக்களுக்கு நான் அதிகம் செய்ய விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக நான் பெற்ற அனுபவங்களை வீணடிக்க விரும்பவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை முடிந்த பிறகு மக்களுக்கு சேவை செய்வதில் பெரிய பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்’’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி, "ராபர்ட் வதேரா பல தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர். அந்த வகையில் தான் அவர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமதி பெற வேண்டுமா?" என பதிலளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள பாஜக, "காங்கிரஸ் கட்சியின் புதிய பிரதமர் வேட்பாளர் அறிமுகம் இது" என கூறி கேலியாக பதிவிட்டுள்ளது.