தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ''கிரண்பேடி அம்மையாரைப் பொறுத்தவரை புதுச்சேரி மாநில மக்களுக்கு விரோதமாக கடந்த 4 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்தார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றுகின்ற மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்; அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்; அதிகாரிகளைத் தன்னிச்சையாக அழைத்து உத்தரவிட்டிருக்கிறார்; அதிகாரிகளை வசைபாடியிருக்கிறார்; மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
அவரை திரும்பப்பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறோம். கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கிரண்பேடிக்கு கிடைத்த தண்டனை. புதுச்சேரிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கிரண்பேடி அம்மையாரை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.