நடிகர் சுஷந்த் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அவரது காதலி ரியா சக்ரபர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் தத்ரூப நகல் போல நடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த மாதம் (ஜூன் 14) மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலிவுட் திரையுலகில் வாரிசுகளின் கோலோச்சுதலும், ஒடுக்குமுறையும்தான் இதற்கு காரணம் என்று பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். வாரிசு நடிகர்கள் தங்கள் செல்வாக்கை தக்கவைக்க, சுஷாந்தின் வளர்ச்சியைத் தடுத்து அவரது வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்தன.
இந்நிலையில் சுஷாந்தின் நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குநர்கள் என சுமார் 38 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்ரபர்தியிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் புகார் அளித்துள்ளார்.
சுஷாந்தை நடிகை ரியா மிரட்டியதாகவும், மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் பயன்படுத்திய மாத்திரைகள், மருந்து சீட்டுகளை மீடியாவுக்கு தெரியபடுத்தி சுஷாந்தை பைத்தியம் என்று கூறப்போவதாகவும் ரியா மிரட்டியதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை, சுஷாந்த் அவரது சகோதரியிடம் தெரிவித்தார் என்றும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை யாரும் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, நடிகை ரியா தான் கையாண்டு வந்துள்ளார் என்றும் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சுஷாந்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது உட்பட சில பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவரிடமும், அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த பாட்னா காவல்துறையினர் மும்பை வந்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமின் கோரி, ரியா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.