இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.
இதற்கிடையே கடந்த ஜூன் 28 ஆம் தேதி (28.06.2024) தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையிலும் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று (24.07.2024) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக அம்மாநில அரசு இன்று (25.07.2024) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் தற்போது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மாநில அமைச்சர் எச்.கே பார்ட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை கொண்டுவந்தார். அதில், ‘மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இருந்து கர்நாடகமாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.