
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம், குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம், வன்முறையாகி மாநிலமே கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த வன்முறையில், 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். பல கட்ட நடவடிக்கைகள் எடுத்த போதிலும், எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இரண்டு வருடங்களாக வன்முறை நீடித்துக் கொண்டே இருக்கிறது. வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூர் முதல்வர் பிரேங் சிங்கை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், இனக்கலவரத்தை தூண்டிய வகையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கடந்த 9ஆம் தேதி மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மணிப்பூரில் முழு நேர முதல்வர் இல்லாததால், ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கான காலக்கெடு நேற்றோடு (12-02-25) முடிவடைந்தது. அதே வேளையில், மணிப்பூர் மாநிலத்திற்கு அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து பா.ஜ.க மாநிலப் பொறுப்பாளர் சம்பித் பத்ரா, பல கட்டமாக கூட்டங்கள் நடத்தி வருகிறார். தற்போதைய சட்டசபை சபாநாயகர் சத்யபிரதா சிங், அமைச்சர் பிஸ்வஜித் சிங், அமைச்சர் கேம்சந்த், எம்.எல்.ஏ ராதேஷ்யாம், பசந்த் குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பா.ஜ.க மாநில பொறுப்பாளர் சம்பித் பத்ரா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஆனாலும், இதுவரை இடைக்கால முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதனால், அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி திரும்பி இந்தியா வந்ததும், மணிப்பூர் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்று பா.ஜ.கவின் ஒரு தரப்பினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில், ஜனாதிபதி ஆட்சி நடைபெறக் கூடும் என்று ஒரு தரப்பினரும் நம்புகின்றனர்.