இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுடன் இணைந்து பணியாற்றிய நான்கு துணை ஆளுநர்களில் இவரும் ஒருவர் ஆவார். தனது பதவிக்காலம் முடிவடைய ஆறு மாத காலம் உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் விரால் ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார்.
அதன் பிறகு சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். இதற்கிடையே குறுகிய காலத்தில் ரிசர்வ் வங்கியின் மற்றொரு துணை ஆளுநர் ராஜினாமா செய்துள்ளது ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என பொது மேடையில் விரால் ஆச்சார்யா பேசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்விப் பணியில் ஈடுபட இருப்பதாக விரால் ஆச்சார்யா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.