நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியுள்ளது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் உடன் குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர். அப்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை புரிந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த அணிவகுப்பில் குடவோலை முறையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றது. அப்போது ‘குடவோலை கண்ட தமிழ்க் குடியே வாழிய வாழியவே' என்ற பாடலுடன் ஊர்தி அணிவகுப்பாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.