ரிசர்வ் வங்கி அவ்வப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும். அப்படி குறைக்கும் பட்சத்தில் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க வழிவகுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ கடன் விகிதத்துடன் தங்கள் டெபாசிட் மற்றும் கடன் வட்டி விகிதங்களை இணைப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளுக்கான கடன் வட்டியை ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறைக்கும் நிலையில் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உடனுக்குடன் வழங்குவதில்லை என்ற புகார் இருந்துவருகிறது.
பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடந்த ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்கும்போதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டியும் உடனுக்குடன் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.