
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் நடாளுமன்ற வளாகத்தில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையான மற்றும் அவமானகரமான செயல் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கையில் நடாளுமன்ற வளாகத்தை தூய்மை மற்றும் புணரமைபு பணி மட்டுமே மேற்கொள்ளபடுகிறது. சிலைகள் ஏதும் அகற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.