கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மிகவும் தேவை என்று செய்தி பரவியதால் அதற்காக மருந்துக் கடைகளில் படையெடுக்கத் தொடங்கினார்கள் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். இந்தப் படையெடுப்பை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிரை பலர் கள்ளச்சந்தையில் விற்றுக் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலி ரெம்டெசிவிர் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்தும் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் பல கோடி மதிப்புள்ள போலி ரெம்டெசிவர் மருந்து குப்பிகளையும், அதில் அடைத்திருந்த குளுக்கோஸ் பாட்டில்களையும், ரூ.90 லட்சம் வரை பணத்தையும் கைப்பற்றி 7 பேரை கைதும் செய்தனர். இப்படி மனித உயிர்களோடு விளையாடும் விஷமிகள் புற்றீசலாக ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் பாக்ரா நதியில் ஓடும் தண்ணீரில் ஆயிரக்கணக்கான ரெம்டெசிவர் மருந்து பாக்கெட்டுகள் மிதந்து சென்றதை அப்பகுதி இளைஞர்கள் எடுத்துப் பார்த்து ஆதங்கப்பட்டுள்ளனர். அவை போலியா அல்லது உண்மையான ரெம்டெசிவிரா என்ற சந்தேகத்துடன் எடுத்த நிலையில், மருந்துகள் நல்ல தண்ணீரில் கலப்பதால் தண்ணீர் கெட்டுப் போகும் என்று பேசிக்கொண்டே அந்த மருந்துப் பெட்டியை திறந்து பார்க்கிறார்கள். அந்தப் பெட்டியில் "ஃபார் யூஸ் இன் இண்டியா நாட் ஃபார் எக்ஸ்போர்ட்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் போலி மருந்துகள் என்பதால் ஆற்றில் விட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. போலி மருந்து தயாரிப்பவர்களை அடியோடு ஒழிக்கவில்லை என்றால் பல ஆயிரம் உயிர்கள் இதனால் போவதை தடுக்க முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.