ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் தனது சந்தாதாரர்களாக 85.6 இலட்சம் பேரை புதிதாக சேர்த்துள்ளது.
அதேசமயம் மற்றத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை, ஏற்கனவே தன்னிடம் இருந்த வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டில் நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ புதிதாக 85.6 இலட்சம் பேரை தன் சந்தாதாரர்களாக சேர்த்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் மொத்த சந்தாதாரர்கள் 28.01 கோடி என இருக்கிறது.
நாட்டில் அதிக சந்தாதாரர்களை கொண்ட நிறுவனமாக உள்ள வோடாஃபோன் ஐடியா, இந்தக் காலகட்டத்தில் தன் நிறுவனத்தின் 23.32 இலட்சம் சந்தாதாரர்களை இழுந்து, 41.87 கோடி என இருக்கிறது.
இதே நவம்பர் இறுதி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் 15.01 இலட்சம் பேர் ஏர்டெலில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 34.03 கோடியாக உள்ளது.
மேலும் இந்தக் காலகட்டத்தில் மட்டும் நாட்டின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,193.72 மில்லியனில் இருந்து 1,197.87 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 0.35% புதிய சந்தாதாரர்கள் புதிதாக இணைகிறார்கள் என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.