பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸோமேட்டாவின் வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், இந்தி தேசிய மொழி என்றும், அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளரிடம் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
#RejectZomato#Reject_Zomato#RejectKFC#hindi_is_not_our_national_language
— கார்த்திகேயன் ஆறுமுகம் (@KarthikeyanTwts) October 24, 2021
pic.twitter.com/VnyN87T80R
தொடந்து சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக, வாடிக்கையாளர் சேவை மைய முகவரின் செயலுக்கு ஸோமேட்டா மன்னிப்பு கோரியது. இந்தநிலையில் பிரபல ஃபாஸ்ட் ஃபுட் உணவகமான கேஎஃப்சியும் அதேபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள கேஎஃப்சிக்குச் சென்றுள்ளார். அங்கு தொடந்து இந்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்தப் பெண் அங்குள்ள ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஊழியர், "நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியாவிற்கு வர உங்களுக்குப் பாஸ்போர்ட் தேவைப்படுகிறதா? இந்தி நமது தேசிய மொழி' என தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்தப் பெண், எங்களது மொழியே எங்களுக்கு முக்கியம் என பதிலளித்துள்ளார். கேஎஃப்சி ஊழியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கேஎஃப்சி ஊழியர், இந்தி தேசிய மொழி என கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து கன்னட மக்கள், கேஎஃப்சியைப் புறக்கணிக்குமாறு குரல் எழுப்பினர். அதனையொட்டி #Rejectkfc எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டானது. இந்தநிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக, கேஎஃப்சி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில், தற்போது வைரலாகி வருவது பழைய வீடியோ என்றும், தற்போது அது மீண்டும் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள செய்தித்தொடர்பாளர், "கேஎஃப்சி இந்தியா அனைத்து சமூகங்களின் கலாச்சார விழுமியங்களுக்கும் உயர்ந்த மரியாதையைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு பிராண்டாக, எங்கள் நுகர்வோர் எப்போது, எங்குள்ள கேஎஃப்சிக்கு சென்றாலும் ஒரே மாதிரியான அனுபவம் பெறுவதை உறுதிசெய்வது எங்கள் முயற்சியாகும், எனவே தற்போது எங்களிடம் ஒரு பொதுவான பிளேலிஸ்ட் உள்ளது. அந்த பிளேலிஸ்ட் உரிமத்துடன் மொத்தமாக வாங்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள எங்கள் உணவகங்களில் ஒலிபரப்பப்படுகிறது" எனவும் கூறியுள்ளார்.