ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவின. அந்த நாட்டிற்கு கைலாஸா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அதற்கான தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் என சிலவும் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்திருந்தது.
தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்ததையடுத்து, அவர் அப்போதே ஹெய்டி தீவிற்கு சென்றிருக்கலாம் எனவும் அந்நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளோம். அதேநேரம், பல குற்றச் சம்பவங்களில் தேடப்படும் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது. நித்யானந்தா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாரா என்பதை எங்களால் கூற முடியாது. ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள இந்திய தூதரகங்களில் நித்தியானந்தா குறித்து தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்..