நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் நேற்று (12-12-23) நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததில் நேற்று முன் தினம் (11-12-23) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசினார்கள். அதில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “ஜம்மு - காஷ்மீர் வழக்கில் சரியோ, தவறோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், சட்டரீதியான ஆதரவையும் வழங்கியிருக்கிறது
ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அரசியலமைப்பு அமைப்புகளால் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறக்கிறது. இறையாண்மை பற்றி பேசப்படுகிறது. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக கடமைகள் என்ன ஆனது?. சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை முழுமையாக கேட்டிருக்க வேண்டும். அந்த சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுகியிருக்க வேண்டும்” என்று கூறினார்.