பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபத்தில் தலைமறைவானார். காலாவதியான பாஸ்போர்ட் வைத்துள்ள நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. அதனையடுத்து ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டதாகவும், அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்ததோடு, தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.
நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஜனார்த்தன சர்மா என்பவர் தனது இரண்டு மகள்களை நித்தியானந்தாவிடம் இருந்து மீட்டுத் தருமாறு மனு அளித்திருந்தார். குஜராத்தில் நித்தியானந்தா மீது நடக்கும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளில் நித்தியானந்தா ஆஜராகாமல் பலமுறை வாய்தா வாங்கி வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா, நித்தியானந்தாவுக்கான ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார்.
ப்ளு கார்னர் நோட்டீஸ் மூலமாக நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தேடும் நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய ராம்நகர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.