இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் "ஜல் சக்தி" என்ற புதிய துறை இடம் பெற்றுள்ளது. அந்த துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவர். நாடு முழுவதும் மழை பெய்யும் காலங்களில் மழை நீரை சேமிக்கும் வழிமுறைகள், நிலத்தடி நீர்வளத்தை அதிகரித்தல், அனைத்து கிராமத்திற்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க இத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைளை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த வருட கோடை காலத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மக்களுக்கு தண்ணீர் போய் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா நகர் அருகே அமைந்துள்ளது பரஸ்ராம்புரா கிராமம். அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கிடைக்கும் நீரை சேகரிப்பதுடன், பாதுகாத்து வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள மக்கள் தண்ணீரை விடிய விடிய பாதுகாத்து வருவதால், வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல் தங்கம், வெள்ளியாக தண்ணீரை கருதி தண்ணீரை சேமித்து வைக்கும் டிரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர். இதை கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.