ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று செய்திகள் உலா வரும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று (25/09/2022) இரவு 07.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே பார்வையாளராக கலந்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ராஜஸ்தான் மாநில பொதுச்செயலாளர் அஜய் மக்கானும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருக்கிறார். இது ஒரு வாரத்திற்குள் நடைபெறும் இரண்டாவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஆகும்.
முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்படுவதற்கு, சோனியா காந்தி குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியில் தனக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்கவே அவர் விரும்பக்கூடும். அதேநேரம், ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களுக்கு அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டாலும், முதலமைச்சராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.