கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் நெருங்கிய தொடர்பாளர்களின் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் அண்மையில் அதிரடி ரெய்டினை நடத்தியது வருமானவரித் துறை. குறிப்பாக, எடியூரப்பாவின் மகன்களான ராகவேந்திரா, விஜயேந்திரா ஆகிய இருவரின் நெருங்கிய உதவியாளராகவும் நண்பராகவும் இருந்த உமேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத கட்டுக்கட்டான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரெய்டு நடத்தப்பட்ட இடங்களிலிருந்து முக்கியமான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல, ஒரு நிறுவனத்திலிருந்து 382 கோடியும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து 105 கோடியும் என மொத்தம் 487 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவற்றுக்கு கணக்கு காட்டப்படவில்லை. இது தவிர, பிற இடங்களில் நடந்த சோதனையில் 750 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், விலைமதிப்புமிக்க பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.