மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இதனை வரவேற்கும் விதமாக அந்தப் பதிவை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு ‘கருப்பு பெட்டி’ ஆகும். அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. தேர்தல் ஆணையம் பொறுப்பபில்லாமல் செயல்படும் போது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.