மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ம்ரிதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுலின் இந்த தோல்வி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு இன்று ராகுல் காந்தி முதன்முறையாக அமேதி தொகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து அவர் பேசினார். தனது தோல்விக்கான காரணத்தைக் குறித்து பேசுவதற்காக அவர் நிர்வாகிளை சந்தித்தார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் பேச முடியாமல், அவரை கட்டியணைத்து அழுதனர். பின்னர் ராகுல் காந்தி அவர்களை தேற்றினார். 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு முறைதான் காங்கிரஸ் ஆதரவை பெறாத வேட்பாளர் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.