இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் உரையாடல்கள் அரசின் ஏற்பாட்டில் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகிய 4 எம்.பி.க்கள் உட்பட 10 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளது.
இவர்கள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கும் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், “செல்போனை ஒட்டுக் கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள் செய்யும் செயல்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.