Skip to main content

“மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான போர்” - ராகுல் காந்தி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rahul Gandhi says Battle between Mahatma Gandhi and Godse

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

அதில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதனை எதிர்கொண்டு இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவிரமாக இயங்கி வருகிறது. 

 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ஷாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று இன்று (30-09-23) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வருகிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர் ஆகும். இந்த போரில், ஒரு பக்கம் காங்கிரஸும் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒருபுறம் மகாத்மா காந்தி, மற்றொரு பக்கம் கோட்சே. அதுபோல் இந்த போர் என்பது வெறுப்புக்கும், அன்பு மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். 

 

அவர்கள் எங்கு சென்றாலும், வெறுப்பை பரப்புகிறார்கள். இப்போது மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களிடம் அவர்கள் வெறுப்பைக் காட்டியதால் அதனையே அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Shivraj Singh Chauhan resigns

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேலை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.