தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது.
இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
எக்ஸ் நிறுவனம் பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் பேச்சை கேட்பதை கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையைக் கூறினால் அவர் வீட்டுக்கு சி.பி.ஐயை அனுப்புகிறீர்கள்.
மிக முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறீர்கள். 144 தடை, இணையத்தடை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உண்மைக் குரல்களை நசுக்குவது தான் உங்களின் ஜனநாயகமா?. மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.