சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணி மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. இப்பேரணியில் இன்று பேசிய ராகுல் காந்தி, "மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை அழிக்க ஒரு வழியாகும், இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது விவசாயிகள் மீதான தாக்குதல். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஊரடங்கு காலத்தில் மோடி அரசு அழித்துவிட்டது. பிப்ரவரியில் கரோனா பற்றி நான் எச்சரித்தேன், ஆனால் நான் கேலி செய்கிறேன் என்று பாஜகவினர் சொன்னார்கள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹத்ராஸ் சம்பவம் குறித்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட குடும்பம் தனியாக இல்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்பினேன், நாங்கள் அவர்களுக்காக இருக்கிறோம். முழு குடும்பமும் உத்தரப்பிரதேச நிர்வாகத்தால் குறிவைக்கப்பட்டது, ஆனால் நம் பிரதமர் இந்த விஷயம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை" எனத் தெரிவித்தார்.