Skip to main content

ராகுல் காந்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை.... இரவு வரை காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள்! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Rahul Gandhi interrogated for about 10 hours .... Congress MPs detained till night!

 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று (13/06/2022) 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அவர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

 

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேரணியாக சென்று, நேற்று (13/06/2022) காலை 11.00 மணியளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 

 

உணவு இடைவேளை அளிக்கப்பட்ட பின், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தனர். பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிற்பகலில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 10 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நேற்று இரவு 11.00 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். 

 

இன்றும் (14/06/2022) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், மீண்டும் ராகுல் காந்தி ஆஜராவார் என்று தெரிகிறது. இதனிடையே ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் பல்வேறு காவல் நிலையங்களில் இரவு வரை காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

 

டெல்லி துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது நடவடிக்கையின் போது, காவல்துறை முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதாக, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

இது தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முரட்டுத்தனமாக மூன்று காவல்துறையினர் தாக்க வரும் போது, லேசான எலும்பு முறிவு ஏற்படுவது அதிஷ்டம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

லேசான எலும்பு முறிவு என்பதால், 10 நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று, மருத்துவர்கள் அறிவுரைக் கூறியுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்