நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம் ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்; சாமானிய மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸின் தேர்தலை அறிக்கையையும், பழைய பட்ஜெட் உரையையும் வெட்டி ஒட்டி இணைத்துத் தாக்கல் செய்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.