ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரான்ஸின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் நாட்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில், மீடியாபார்ட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், 2007 - 2012ஆம் ஆண்டுவரை, இந்தியாவிற்கு ரஃபேல் விமானங்களை விற்க வழிவகை செய்ய இடைத்தரகராக செயல்பட்ட சுஷேன் குப்தா என்பவரின் இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு, போலியான விலை விவரப்பட்டியல் மூலம் ஃபிரான்ஸ் நாட்டின் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் 65 கோடி ரூபாயை கமிஷனாக அளித்தது என கூறியுள்ளது. டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம்தான் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் போலியான விலை விவரப்பட்டியல் மூலம் இடைத்தரகருக்கு கமிஷன் அளிக்கப்பட்டது தொடர்பான ஆதாரம், இந்தியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் 2018ஆம் ஆண்டு முதலே இருந்துவருகிறது என்றும், ஆனால் இரண்டு அமைப்புகளும் இந்த விவகாரத்தை தொடர வேண்டாம் என முடிவுசெய்து, போலி விலை விவரப் பட்டியல் குறித்து விசாரணையைத் தொடங்கவில்லை எனவும் மீடியாபார்ட் கூறியுள்ளது.
இதற்கிடையே 2007 - 2012 ஆம் ஆண்டு என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலம் என்பதையடுத்து, மீடியாபார்ட் நிறுவனத்தின் செய்தியைச் சுட்டிக்காட்டி பாஜக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஐ.என்.சி (INC- இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் 'எனக்கு கமிஷன் தேவை' என அர்த்தம். இது மிகையான ஒன்றாக இருக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்குள்ளும் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஆனாலும் அவர்களால் ஒப்பந்தம் போட முடியவில்லை" என கூறியுள்ளார்.
மேலும், “ரஃபேல் போர் விமானம் குறித்து நீங்களும் உங்கள் கட்சியும் ஏன் இத்தனை ஆண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்த முயன்றீர்கள்?” என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.