இந்திய நிறுவனம் கண்டறிந்த கரோனா சோதனை கருவியை நாடு முழுவதும் பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,86,406 ஆக உயர்ந்த நிலையில், இதில் 1,02,393 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையிலும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறியும் வகையில் கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், புனேவில் செயல்படும் நிறுவனம் ஒன்று புதிய கரோனா பரிசோதனை கருவியைக் கண்டறிந்துள்ளது. இதுவரை ஜெர்மன் நிறுவன பரிசோதனை கருவியே இந்தியா முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், புனேவில் செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் கண்டறிந்துள்ள இந்த புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தும் சோதனை கருவியின் விலையைவிட மிகக்குறைவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவியின் மூலம் 100 பேருக்குச் சோதனை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.