Skip to main content

புதுச்சேரியின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!  'இந்திய ஒன்றிய அரசு' என குறிப்பிட்டு தமிழிசை பதவிப்பிரமாணம்!  

Published on 29/06/2021 | Edited on 29/06/2021
Puducherry's new cabinet takes charge

 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி  ஆட்சி அமைத்தது. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக கடந்த மே மாதம் 07ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பதவி பங்கீட்டில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து. தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு என ஒவ்வொரு நிகழ்வும் காலதாமதமாகவே நடைபெற்றுவந்தன.

 

Puducherry's new cabinet takes charge

 

இதனிடையே அமைச்சர்கள் பங்கீடு இறுதி செய்யப்பட்டு பாஜகவிற்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி  வழங்கவும், என்.ஆர்.காங்கிரசுக்கு 3 மந்திரி பதவிகள் எனவும் உடன்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 5 அமைச்சர்கள் கொண்ட பட்டியலைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார். இந்தப் பட்டியலை தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திர. பிரியங்கா மற்றும் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது.

 

Puducherry's new cabinet takes charge

 

அதையடுத்து நேற்று (28.06.2021) மதியம் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சாய். சரவணகுமார், சந்திர. பிரியங்கா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நியமன எம்.எல்.ஏக்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதேசமயம் இவ்விழாவை திமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

 

Puducherry's new cabinet takes charge

 

விழாவையொட்டி கவர்னர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சொளந்தரராஜன் பேசும்போது, “இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” என உறுதிமொழியை வாசித்தார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து ‘மத்திய அரசு’ என்று அழைப்பதற்குப் பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பிற கட்சியினர் ஆகியோர் 'இந்திய ஒன்றிய அரசு' என்று பயன்படுத்துகின்றனர்.  அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ‘இந்திய ஒன்றியம்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்