புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (20.05.2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

" வெளியில் இருந்து புதுச்சேரிக்கு வருவோருக்குதான் கரோனா தொற்று உள்ளது. வெளியில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் வீட்டில் தனிமைப்படுத்துகிறோம். அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்கிறோம். ஒருவர் மருத்துவமனையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சையில் உள்ளார். அதேபோல் காரைக்காலுக்கு இருவர் திரும்பியுள்ளனர்.

Advertisment

Advertisment

puducherry narayanasamy interview

கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க மருந்து கண்டுபிடிப்பது அவசியம். இந்தியாவும் அந்த முயற்சியில் உள்ளது. மத்திய அரசானது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க எந்த உத்திராவாதமும் நிதி அமைச்சகம் தரவில்லை. பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் இவர்கள்தான். அத்துடன் கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களும் பாதிப்பில் உள்ளனர். அவர்களுக்க்கான முழுமையான திட்டமிடலுமில்லை.

நாட்டிலுள்ள 13 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 5 ஆயிரம் செலுத்தினால் வாழ்வு நிலை மாறும் என்ற கருத்தை மத்திய அரசு செயல்படுத்த மறுக்கிறது. மத்திய அரசின் இத்திட்டத்தில் முழுமையாக மக்களுக்கு கிடைப்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடிதான். மற்றவை பட்ஜெட்டில் அறிவித்ததுதான். மாநிலங்கள் நிதி பற்றாக்குறையால் பாதித்துள்ளன. வருவாய் இல்லாத நிலை உள்ளது. ஊரடங்கு தளர்த்தினாலும் சகஜ வாழ்வு திரும்பவில்லை. மாநிலங்களுக்கு தாராள நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளோம்.ஏற்கெனவே தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு, பாதிக்கப்பட்ட இழப்பீடு தரவேண்டும் என கடிதம் எழுதியும் பிரதமரிடமிருந்து பதில் வரவில்லை. கரோனா காலத்தில் ரூ.995 கோடி வேண்டும் என கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.

புதுச்சேரி மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது. உடனடியாக உதவ வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு இன்னும் அதிகளவில் உள்ளது. ஏராளமானோர் நடந்து செல்லும் சூழல் உள்ளது. கையில் பணமில்லை. கையில் பணத்தை தர கோரினோம். சிறப்பு ரயில்களை மத்திய அரசு நிறைய இயக்க வேண்டும். இதை மாநில அரசோடு ஒருங்கிணைந்து செய்வது அவசியம்.

மேட்டூர் அணை திறக்கும் சமயத்தில் குறுவை விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க 1 டி.எம்.சி கிடைக்க ஆயத்தப்பணிகளை செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். கடைமடை பகுதி வரை தண்ணீர் வர தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை (21.05.2020) முதல் புதுச்சேரி-காரைக்கால் பஸ் போக்குவரத்து இயங்க உள்ளது. பக்கத்து மாவட்டங்களில் கரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தொற்று அறிகுறி வரும் என்று கூறுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.